என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கர்நாடக மந்திரி"
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, 2017-ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்தபோது சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் கூறினார். மேலும் இதற்காக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரூபா, “தான் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து கர்நாடக மாநில போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “பரப்பன அக்ரஹாரா சிறையில் எழுந்த புகார் குறித்து விசாரணை குழு அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை கவனித்தேன். ஊடகங்களிலும் இதுபற்றி வெளியானதை பார்த்தேன். சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #Sasikala #VIPtreatment
சென்னை:
மேகதாது அணை பிரச்சினை பற்றி “தந்தி டி.வி.” சார்பில் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி சிவக்குமாருடன் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கர்நாடகாவிற்கு மேகதாது அணை ஏன் தேவை?
பதில்:- இது கர்நாடகாவுக்கு அல்ல. காவேரி இந்த நாட்டின் நதி. இந்த வருடம், கொடுக்க வேண்டிய 177 டி.எம்.சியை தாண்டி, கிட்டத்தட்ட 450 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளது. நாங்களும் பயன்படுத்த முடியவில்லை, தமிழ்நாடும் பயன்படுத்த முடியவில்லை. வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு தான் அதிகம் உதவும். தமிழக விவசாயிகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவும் தான் இந்த அணை கட்டப்படுகிறது.
கேள்வி:- தற்போது கபினி, ஹாரங்கி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் காவிரி ஆணைய கட்டுப்பாட்டில் வருகிறது. நீங்கள் கட்டும் புதிய அணையும் அதன் கட்டுப்பாட்டில் வருமா?
பதில்:- ஆம், நிச்சயமாக. அது அவர்கள் கடமை.
கேள்வி:- கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டப்படும் போதெல்லாம், தமிழக விவசாயிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. விவசாயம் செய்யப்படும் பகுதிகளின் பரப்பளவு குறைந்து விடும் என்ற கவலை எழுகிறது. இப்போது மறுபடியும் ஒரு புதிய அணை பற்றி நீங்கள் பேசும்போது, இந்த அச்சம் மீண்டும் ஏற்படுகிறது.
பதில்:- இல்லை. இதை பற்றி கவலை தேவையில்லை. தமிழகத்திற்கு இந்த அணை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த அணை தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும்.
கேள்வி:- மேகதாது திட்ட வரைவு நகலில், பெங்களூர் நகருக்கு 5 டி.எம்.சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 டி.எம்.சி எடுத்து கொண்டிருக்கும்போது, இந்த 5 டி.எம்.சி கூடுதலாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா?
பதில்:- இல்லை அப்படி எடுக்க முடியாது. ஏற்கனவே என்ன ஒதுக்கப்பட்டுள்ளதோ அதைதான் எடுக்க முடியும்.
கேள்வி:- அப்போது இந்த 5 டி.எம்.சி என்பது ஒதுக்கப்பட்ட 14 டி.எம்.சி நீரின் ஒரு பகுதி தானே ?
பதில்:- ஆம், இது அனுமதிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி தான்.
கேள்வி:- உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் என்று சொன்னபோதெல்லாம் அதை கேட்க கூடாது என்று தீர்மானம் போட்டீர்கள்... இப்போது உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று சொல்வது முரணாக இல்லையா?
பதில்:- ஆதரவு இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நினைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #DKShivakumar
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு நடத்த இருக்கும் கர்நாடக அமைச்சரின் முயற்சியை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக் கூடிய அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.
கர்நாடக மந்திரி தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (7-ந்தேதி) மேகதாது அணை குறித்து ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி அவர் அறிவித்திருப்பதற்கு காரணம் மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதி தான்.
கர்நாடக அரசு ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான வரைவு அறிக்கையை தாயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் அளித்த போதே மத்திய அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் மத்திய அரசு அரசியல் காரணத்திற்காக கர்நாடகத்தில் மேகதாது அணை விவகாரத்தில் நேரடியாகவே ஆதரவு அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஆய்வு நடத்த இருப்பதாக கூறியிருக்கின்ற கர்நாடக அமைச்சரின் முயற்சியை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் உடனடியாக ஈடுபட வேண்டும்.
மத்திய அரசும் கர்நாடக அரசிடம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கோட்பாடுகளையும், அதிகாரத்தையும் குறிப்பிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும்.
இல்லையென்றால் மத்திய அரசின் தமிழக விரோதப் போக்குக்கு தக்க பாடத்தை வரும் காலங்களில் தமிழக மக்கள் புகட்டுவார்கள். மாநிலங்களுக்கு இடையே நல்லுறவும், நியாயமும் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தில் மத்திய அரசுக்கு உள்ள பொறுப்பு, கடமை, மக்கள் நலன், மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை, நாட்டு நலன் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TamilMaanilacongress #GKVasan #MekedatuDam
கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது டி.கே.சிவக்குமாருக்கு அவருடைய தொழில் பங்குதாரர் சச்சின் நாராயண், நண்பரும்-டிராவல்ஸ் நிறுவன அதிபருமான எஸ்.கே.சர்மா, டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணியாற்றி வரும் ஊழியர் அனுமந்தய்யா, கர்நாடக பவன் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.
இது சம்பந்தமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்துக்கு டி.கே.சிவக்குமாருக்கு, சச்சின் நாராயண், எஸ்.கே.சர்மா உதவி செய்துள்ளனர். டி.கே.சிவக்குமார், எஸ்.கே.சர்மா ஆகியோரின் அசையா சொத்துகளை ராஜேந்திரன் நிர்வகித்து வருகிறார். அனுமந்தய்யா ‘ஹவாலா’ முறையில் மாற்றும் பணத்தை டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாத்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மீது நேற்று அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. மேலும் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. #KarnatakaMinister #DKShivakumar
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், டெல்லியில் இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம். இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம். இதில் நீர் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதற்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவை மீறவில்லை. தன்னிச்சையாக செயல்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும், தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்படாது. இந்த விவகாரத்தில், தமிழகத்துடன் சண்டையிட விரும்பவில்லை. நட்புறவையே விரும்புகிறோம். தமிழகத்தின் கவலைகளை தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, தமிழக அரசிடம் கூறி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Mekedatu #MinisterShivakumar
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், பின்னர் மடிகேரி நகரில் மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ், கலெக்டர் ஸ்ரீவித்யா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனையும் நடத்தினார். இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் உள்ளூர் பா.ஜனதா பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது மந்திரி சா.ரா.மகேஷ் குறுக்கிட்டு “இந்த கூட்டத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய பேச்சை முடியுங்கள்” என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ராணுவ மந்திரி கோபம் அடைந்து எனக்கு பாடம் சொல்லித் தரவேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. மந்திரி சா.ரா.மகேஷ், இது தொடர்பாக ராணுவ மந்திரியை குற்றம்சாட்டி ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்.
இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மாவட்ட நிர்வாகம் வகுத்துத்தந்த நிகழ்ச்சி நிரலின்படிதான் ராணுவ மந்திரி அந்த கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் சா.ரா.மகேஷ், தனிப்பட்ட முறையில் ராணுவ மந்திரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது மாநிலங்களவையின் கண்ணியத்தை குறைப்பதாகும். மேலும் இந்திய ஆட்சி அமைப்பு முறை பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. மாநில மந்திரியின் இந்த செயல் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறப்பட்டு உள்ளது. #NirmalaSitharaman #SARAMahesh
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்